Tuesday 28 July 2020

சிவ சிந்தனை 3


என்னென்ன எண்னென்ன எழுத்தென்ன எல்லாமென
எனக்களிக்கும் எம்பிரான் எண்ணமே...

அகமென்ன புறமென்ன அழகென்ன அறிவென்ன
அள்ளித்தரும் அம்பலவாணன் அருந்தவமே...

பண்னென்ன பொன்னென்ன மண்னென்ன மலரென்ன
மகிழ்ச்சிவருமே மதிசூடினன் மகத்துவமே...

முன்னென்ன பின்னென்ன முதலென்ன முடிவென்ன
முக்திதருவான் முக்கண்ணன் முன்னமே...

Thursday 23 July 2020

ஆசை பைத்தியங்கள்

அன்றாட வேலைகள்
அலுத்து போயினும்....
அவசர சாலைகள்
சலித்து போயினும்....
அல்லல்கள் ஆயிரமாயினும்....
அவ்வப்போது வந்து போகும் ஒரு தனி சுகம்
மனதில் வந்து மோதும் அவள் முகம்....

Tuesday 21 July 2020

வாலிக்கு ஒரு லாலி


வணங்குகிறேன் எம் தமிழ் கவியே வாலி 
மயங்குகிறேன் உன் தமிழ் கவிகளை பாடி
காவிய கவியே கவிதை அருவியே
வாலிப வாலியே வாழிய வாழியவே

காவிரித்தாய் கரை புரண்டாள் 
நீர் வெள்ளமாய் ஓடியது  திருச்சியில் ஊரெங்கும்
தமிழ்த்தாயும் ஆசை கொண்டதால்
நீர் வெல்லமாய் பாடவே உன்னை பெற்றதோ ஸ்ரீரங்கம்

கனவு கண்டது 
மாலி போல் ஓவிய கலைஞனாக
கலைமகள் ஆக்கியது 
வாலி என்னும் காவிய கவிஞனாக

நீ...கம்பன் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த கவிதை விதையோ
வள்ளுவன் விட்டு சென்ற ஓலைகளின் மிச்சமோ சொச்சமோ 

இசைவாணர்கள் இசை மாலையாய் மெட்டுக்களை மீட்ட மீட்ட
கவி சோலையில் இனிய பாடல் மொட்டுக்களை நீ அவிழ்த்தாய்

வார்த்தை வராமல் அலையும் சில சமயம் பேனா மூக்கு
வித்தைக்காரர் வெற்றிலை பாக்கு தரிக்க சிவந்தது நாக்கு
பாடல் வரவழைக்க விரித்தது சிவப்பு கம்பள வரவேற்பு
வந்து விழ விழ சிந்தனையாளர்க்கே வரும் வியப்பு

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்கு பாட்டா
ஏட்டிக்குப் போட்டியா எதுவாயினும் 
உன் கற்பனை கொட்டியது அழக அழகாய் பல்லவியில்
விற்பனை செய்தது மலை மலையாய் சரணத்தில்

ஏர் பிடிக்கும் உழவன் பூட்டியது மாட்டு வண்டி
பார் வியக்கும் புலவன் நீ கட்டியதோ பாட்டு வண்டி

நீ பாட்டுக்கு தந்தது புது புது அர்த்தம் அகரம்  
நீ பாட்டுக்கு எழுதி எழுதி தொட்டது எண்ணற்ற சிகரம்

திரையில் தலைவர்கள் ஆடிப்பாடி நடித்தனர் 
நீ தீட்டிய கொள்கை பாட்டில் காட்சியை
நிஜத்தில் மக்களும் ரசித்தனர் மயங்கினர்
நடித்தனர் பிடித்தனர் நாட்டில் ஆட்சியை

சொல்லாட்சி வளர்த்தது கொள்கையை தமிழ் திரைப்பாட்டில்
நல்லாட்சி மலர்ந்தது திராவிடர் திருநாட்டில்

புதுமை தமிழில் நீ அலங்கார அரசன்
உன் புதுக்கவிதையில் பூத்ததோ அவதார புருஷன்

உன் போல் சொல் ஆண்டவர் யார் சாமி
என சொல்லவே படைத்தாயோ பாண்டவர் பூமி

பக்தி கடலில் நீ மூழ்கி எடுத்த வெண்மணி முத்து
தமிழ் கடவுள் என்னும் பொன்கவிதை கொத்து

இது மட்டுமா உன் தமிழ் சோலையில்... கவி மாலையில்...
இன்னும் எத்தனையோ இலக்கிய பூக்கள்... இன்னிசை பாக்கள்...

என்னை போல் பலருக்கு என்றும் நீ மானசிக குருவே
உன்னை மனதார எண்ணினால் போதுமே 
கற்பனை வருமே நீ கற்பக தருவே

இருந்த வரை இளங்கவிகளுக்கு 
உன் வீடு ஒரு வேடந்தாங்கல்
இன்று மட்டும் என்ன வெண்மேக தாடியில் 
நீ வெளிவந்து சிரிக்கும் வானமே எங்கள் வேடந்தாங்கல்

வான் புகழ் கொண்ட வாலி வாலி
நின் புகழ் என்றும் வாழி வாழி
தேன் துகள் சொல் தேடி தேடி
என் தமிழ் பாடும் உமக்கு லாலி லாலி

Saturday 18 July 2020

அமுதே தமிழே


அழகாய் பழகும் நாவில் நற்றமிழ்
அமுதாய் திகழும் பாவில்  பைந்தமிழ்....
தேனில் ஊறும் சுவையாய் தீந்தமிழ்
மலரில் வீசும் மணமாய் பூந்தமிழ்....

மாய விண்ணில் ஒளி கண்டு
தாய் மண்ணில் ஒலி கொண்டு 
வாழ்வில் வழி தேடியது மானுடம்....
ஆண்டவன் அருளை கொண்டு
அகத்தியர் அகரம் கண்டு
வாழ்வியல் மொழி கண்டது தமிழிடம்....

தெய்வீக வரம் பெற்றெழுந்து
தொல்காப்பியர் இலக்கணம் கற்றெழுதி
முத்தமிழ் பெற்றது முழுவடிவம்....
கன்னித்தமிழ் எய்தினாள் முழுப்பருவம்....

மா வேந்தர்கள் கற்குவியல்
எடுத்து எழுப்பியது 
திருக்கோயில்கள்.....
பா வேந்தர்கள் சொற்குவியல்
எடுத்து எழுதியது
சொற்க்கோயில்கள்.....

எந்நாளும் புலவர் பெருங் கூட்டம்
ஓடியது தேடியது தமிழ் காட்டை....
மண்ணாளும் மன்னர் தர பட்டம்
பாடியது ஆடியது பாட்டு வேட்டை....

கவிகள் பலராம் நாட்கள் பலவாம் 
நீந்தியது உலாவியது செந்தமிழ் கடலில்....
செவிகள் எல்லாம் ஏட்டுகள் எல்லாம் 
நிரம்பியது வழிந்தது கன்னித்தமிழ் பாடலில்....

இறைவனும் கேட்டுத்தான்
ஆடினான் பார் சொக்கி....
இசைக்கும் தமிழுக்கும்
மயங்காதோர் யார் பாக்கி....

Thursday 9 July 2020

மெட்டும் பாட்டும் 6


அம்மன் அவள் அழகு மலர்
இன்பம் தரும் அன்பு மலர்
அங்கம் எல்லாம் தங்க மலர்
பொங்கும் நெஞ்சில் ஆசை மலர்
கைகள் பற்றி தினம் அழைத்து
உன் பெயரை உச்சரிக்க
மங்கை மனம் மலராதோ
மஞ்சள் முகம் சிரிக்காதோ
அம்மன் அவள் அழகு மலர்
இன்பம் தரும் அன்பு மலர்
அங்கம் எல்லாம் தங்க மலர்
பொங்கும் நெஞ்சில் ஆசை மலர்

உன் மனதில் இடம் பிடிக்க
ஓடி வந்தேன் தடம் முழுக்க
பக்தன் மனம் புரியாதோ
கண் அசைக்க கூடாதோ
உன் மனதில் இடம் பிடிக்க
ஓடி வந்தேன் தடம் முழுக்க
பக்தன் மனம் புரியாதோ
கண் அசைக்க கூடாதோ

பூவும் பொன்னும் கலந்திருக்கும்
மின்னும் வண்ணக்கன்னம்மம்மா
கெஞ்சி கெஞ்சி அருகில் வந்து
கொஞ்சம் உன்னை கொஞ்சட்டும்மா

திங்கள் சூடும் பொழுதினிலே
ஓடும் இன்ப வெள்ளமிது
பெண்கள் இடும் பொட்டுகளோ
மங்களத்தின் மொத்தமது

பேசும் மலர் சித்திரத்தை
உன் விழிகள் காட்டுதம்மா
இரவில் வரும் நித்திரையை
இரவல் கொஞ்சம் தாரும்மம்மா

செய்யுள் கொண்டு புகழ் பாடி
செந்தமிழில் பாச்சூடி
ஊஞ்சல் வைத்து தாலாட்ட
உள்ளம் போகும் தலையாட்ட

செய்யுள் கொண்டு புகழ் பாடி
செந்தமிழில் பாச்சூடி
ஊஞ்சல் வைத்து தாலாட்ட
உள்ளம் போகும் தலையாட்ட

மொட்டு அவிழ்ந்த பூக்களலெல்லாம்
இதழ்வெளியில் விரியுதம்மா
என் நினைவில் நான் இல்லை
மயக்கம் தீர வாரும்மம்மா

அம்மன் அவள் அழகு மலர்
இன்பம் தரும் அன்பு மலர்
அங்கம் எல்லாம் தங்க மலர்
பொங்கும் நெஞ்சில் ஆசை மலர்
கைகள் பற்றி தினம் அழைத்து
உன் பெயரை உச்சரிக்க
மங்கை மனம் மலராதோ
மஞ்சள் முகம் சிரிக்காதோ
ஆராரிரோ  ஆராரிரோ
ஆராரிரோ  ஆராரிரோ