செவ்வாய், 21 ஜூலை, 2020

வாலிக்கு ஒரு லாலி


வணங்குகிறேன் எம் தமிழ் கவியே வாலி 
மயங்குகிறேன் உன் தமிழ் கவிகளை பாடி
காவிய கவியே கவிதை அருவியே
வாலிப வாலியே வாழிய வாழியவே

காவிரித்தாய் கரை புரண்டாள் 
நீர் வெள்ளமாய் ஓடியது  திருச்சியில் ஊரெங்கும்
தமிழ்த்தாயும் ஆசை கொண்டதால்
நீர் வெல்லமாய் பாடவே உன்னை பெற்றதோ ஸ்ரீரங்கம்

கனவு கண்டது 
மாலி போல் ஓவிய கலைஞனாக
கலைமகள் ஆக்கியது 
வாலி என்னும் காவிய கவிஞனாக

நீ...கம்பன் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த கவிதை விதையோ
வள்ளுவன் விட்டு சென்ற ஓலைகளின் மிச்சமோ சொச்சமோ 

இசைவாணர்கள் இசை மாலையாய் மெட்டுக்களை மீட்ட மீட்ட
கவி சோலையில் இனிய பாடல் மொட்டுக்களை நீ அவிழ்த்தாய்

வார்த்தை வராமல் அலையும் சில சமயம் பேனா மூக்கு
வித்தைக்காரர் வெற்றிலை பாக்கு தரிக்க சிவந்தது நாக்கு
பாடல் வரவழைக்க விரித்தது சிவப்பு கம்பள வரவேற்பு
வந்து விழ விழ சிந்தனையாளர்க்கே வரும் வியப்பு

பாட்டுக்கு மெட்டா மெட்டுக்கு பாட்டா
ஏட்டிக்குப் போட்டியா எதுவாயினும் 
உன் கற்பனை கொட்டியது அழக அழகாய் பல்லவியில்
விற்பனை செய்தது மலை மலையாய் சரணத்தில்

ஏர் பிடிக்கும் உழவன் பூட்டியது மாட்டு வண்டி
பார் வியக்கும் புலவன் நீ கட்டியதோ பாட்டு வண்டி

நீ பாட்டுக்கு தந்தது புது புது அர்த்தம் அகரம்  
நீ பாட்டுக்கு எழுதி எழுதி தொட்டது எண்ணற்ற சிகரம்

திரையில் தலைவர்கள் ஆடிப்பாடி நடித்தனர் 
நீ தீட்டிய கொள்கை பாட்டில் காட்சியை
நிஜத்தில் மக்களும் ரசித்தனர் மயங்கினர்
நடித்தனர் பிடித்தனர் நாட்டில் ஆட்சியை

சொல்லாட்சி வளர்த்தது கொள்கையை தமிழ் திரைப்பாட்டில்
நல்லாட்சி மலர்ந்தது திராவிடர் திருநாட்டில்

புதுமை தமிழில் நீ அலங்கார அரசன்
உன் புதுக்கவிதையில் பூத்ததோ அவதார புருஷன்

உன் போல் சொல் ஆண்டவர் யார் சாமி
என சொல்லவே படைத்தாயோ பாண்டவர் பூமி

பக்தி கடலில் நீ மூழ்கி எடுத்த வெண்மணி முத்து
தமிழ் கடவுள் என்னும் பொன்கவிதை கொத்து

இது மட்டுமா உன் தமிழ் சோலையில்... கவி மாலையில்...
இன்னும் எத்தனையோ இலக்கிய பூக்கள்... இன்னிசை பாக்கள்...

என்னை போல் பலருக்கு என்றும் நீ மானசிக குருவே
உன்னை மனதார எண்ணினால் போதுமே 
கற்பனை வருமே நீ கற்பக தருவே

இருந்த வரை இளங்கவிகளுக்கு 
உன் வீடு ஒரு வேடந்தாங்கல்
இன்று மட்டும் என்ன வெண்மேக தாடியில் 
நீ வெளிவந்து சிரிக்கும் வானமே எங்கள் வேடந்தாங்கல்

வான் புகழ் கொண்ட வாலி வாலி
நின் புகழ் என்றும் வாழி வாழி
தேன் துகள் சொல் தேடி தேடி
என் தமிழ் பாடும் உமக்கு லாலி லாலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக